மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டிருந்தன.
மதுரையைச் சேர்ந்த பத்திரப்பதிவு மற்றும் வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று காலை திருமணம் நடந்தது.
பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தன. பிரமாண்ட கோட்டை நுழைவு வாயில், ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் சாப்பாட்டுப் பந்தல், வி.ஐ.பி டைனிங் என அனைத்திலும் பிரமாண்டம் இருந்தது.
மொய் வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை நடந்த வரவேற்பில் ஐம்பதாயிரம் பேருக்கு ஹை லெவல் டின்னர் கொடுக்கப்பட்டது.
இன்று காலையில் பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது. உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்ட முதலமைச்சர் குடும்பத்து வி.ஐ.பி-க்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பின்பு கறிவிருந்து நடந்தது. இதற்காக 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
அமைச்சர் மூர்த்தியின் கிழக்குத் தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனம் மூலம் அழைத்துவரப்பட்டனர். அனைவருக்கும் பல பொருள்கள் அடங்கிய தாம்பூலப்பை வழங்கப்பட்டது. திருமண அரங்கத்துக்கு வரும் வழியில் ஆயிரக்கணக்கான கரும்பும், குலையுடன் வாழையும் கட்டப்பட்டிருந்ததைத் திரும்பிச் செல்லும்போது மக்கள் கட்டுக்கட்டி எடுத்துச்சென்றனர்.
Discussion about this post