ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
விறுவிறுப்பான ஆட்டம்
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட்கோலியும், கே.எல் ராகுலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் சர்மா இந்த போட்டியில் விளையாடாததால் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த போட்டியில் சொதப்பிய கே.எல் ராகுல் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், விராட் கோலிக்கு சிறப்பான கூட்டணி கொடுத்தார், கடைசி மூன்று ஓவர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 53 பந்துகளில் சதம் அடித்ததோடு மொத்தம் 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 212 ரன்கள் குவித்துள்ளது.
விராட் கோலிக்கு இது 71வது சதமாகும், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்,(1000 நாட்களுக்கு) பிறகு விராட் கோலி இன்றைய போட்டியில் தான் சதம் அடித்துள்ளார்.
இந்தநிலையில், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் விராட் கோலியின் சதத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்கள் தங்களது மகிழ்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post