கன்னியாகுமரி:
இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியை போன்றே மோடியின் ஆட்சியும் நடக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ‘ என்ற பாத யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிமீ தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.
இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் 120 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதனை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
ராகுல் காந்தி பேச்சு இதனைத்தொடர்ந்து இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நாட்டு மக்கள் ஒற்றுமையை வலியுறுத்த காங்கிரஸ் கட்சிக்கு அவசியம் என்ன?
தேசியக் கொடி நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மூவர்ணக் கொடியை நாம் பார்க்கும் போது மரியாதை செலுத்துகிறோம். சிலர் மூவர்ணக் கொடியை சக்கர படம் போட்ட சாதாரண துணியாக கருதலாம். ஆனால் மூவர்ணக் கொடி என்பது சாதாரண துணி அல்ல. தேசியக் கொடியை கையில் ஏந்த நாம் நீண்ட நெடிய போராட்டத்தை சந்தித்துள்ளோம். நமது தேசியக் கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களின் உணர்வுகளையும் பிரபலிக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிபோல் மோடி ஆட்சி குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி செய்து வருகிறார்,. தொழிலதிபர்களின் தயவு இல்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. அவர்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவார். இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியை போன்றே மோடியின் ஆட்சியும் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
Discussion about this post