சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இலங்கை கடற்படையினரால் எல்லை மீறிய செயலால் பல லட்சம் மதிப்பிலான வலைகள், மீன்களை இழந்து வருகின்றன. இதற்கிடைடையே அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களை தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் கடலில் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வுடனே மீன்பிடிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
12 மீனவர்கள் கைது இந்நிலையில் நேற்று 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கடிதம் இவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. இதனால், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post