திருவள்ளூர் :
நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த விரக்தியில் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர்.
அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.இதனையடுத்து இந்த தேர்வுக்கான முடிவு புதனன்று இரவு வெளியானது. அதில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.அதில் தமிழக மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடமும், ஹரிணி-702 மதிப்பெண் பெற்று 2-ஆவது இடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தன்ஷிகா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 50% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு முடிவை ஆர்வத்தோடு எதிர்பார்த்த திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி ஸ்வேதா (19) என்ற மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால், மன வேதனையடைந்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியை மீட்ட பெற்றோர் KMC மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். நீட் தேர்வால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post