சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகம் தடைபட்டுள்ளதால், வாடகை கார் ஓட்டுநர்கள், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் பாதிப்படைந்துள்ளனர்
மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அலுவலகத்திற்கு எளிதாக சென்று வர கார் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. இந்தநிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டீசல் இல்லையென்ற புகார் கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் வார விடுமுறையை அடுத்து திங்கட்கிழமைக்கு காலை பணிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் பெட்ரோல் நிலையங்களில் தங்கள் கார்களுக்கு டீசல் போட வந்த நிலையில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லையென்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டுநர்கள் பாதிப்பு
இதனையடுத்து தங்களது வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்து மற்றும் நண்பர்களின் பைக்குகளில் அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வெளியூர் செல்வதற்காக பயணிகளை ஏற்ற திட்டமிட்டிருந்த நிலையில் டீசல் இல்லாத காரணத்தால் வெளியூர் பயணம் தடைபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். டீசல் தட்டுப்பாடு தொடர்பாக பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூறுகையில், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தியை குறைத்ததன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு பணியை 100%இல் இருந்து 70% ஆக குறைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரவு வழங்கியதும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.
Discussion about this post