ஜியோ நிறுவனத்தின் 45-வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்தும் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையியல் இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உயர்மட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடினர் முகேஷ் அம்பானி.
அப்போது பேசிய அவர், “தீபாவளி முதல் ஜியோவின் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதன்படி பெங்களூரு, சென்னை, காந்தி நகர், சண்டிகர், அகமதாபாத், குருகிராம், புனே, ஹைதராபாத், ஜாம்நகர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும். அதைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும். இந்த 5ஜி சேவை சரியான விலையில் எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக அறிமுகப்படுத்தினார். அப்போது, “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலக அளவில் முக்கிய நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக தான் முன்னெடுக்கவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, “பழங்குடியினர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களால் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருள்களை விரைவில் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தத் தொடங்குவோம். அதுமட்டுமில்லாமல் ‘வாட்ஸ்அப்-ஜியோமார்ட்’ இணைந்து பல புதிய திட்டங்களையும், இன்னும் பல புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
Discussion about this post