சென்னை:
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அரசு உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி தான்யாவுக்கு வெற்றிகரமாக அறுவை செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதிக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். பிறக்கும் போது அனைவரையும் போல சாதாரணமாக இருந்துள்ளார் தான்யா.
இந்த நிலையில், தான்யாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர் கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பு குறையவில்லை.
முக சிதைவு :
நாட்கள் செல்ல செல்ல தான்யாவின் முகம் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கி இருக்கிறது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் தான்யாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.
முதலமைச்சரிடம் கோரிக்கை :
தொடர் சிகிச்சை அளித்தும் சிறுமி குணமடையாததால் முக அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக அவர் பள்ளி படிப்பை முழுவதுமாக பாதித்துள்ளது. இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசு உதவி :
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், குழந்தை தன்யாவுக்கு தேவையான அறுவை சிகிச்சையை சவிதா மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தையின் நிலையை அறிந்து மற்ற உதவிகளையும் அரசு சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை :
முழு சிகிச்சையையும் ஸ்ரீபெரும்புதூர் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்தரவாதம் அளித்தது. இதனை அடுத்து கடந்த 17 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 23 ஆம் தேதி சிறுமிக்கு 31 பேர் கொண்ட உயர் மருத்துவ குழுவினர் உயர் தொழில்நுட்ப முக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
நேரில் சென்ற முதலமைச்சர் :
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து 5 நாட்கள் அவர் ஐசியூவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். உடல்நிலை தேறியதால் அவர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியிடம் நலம் விசாரித்தார். சிறுமியின் தாயாரிடம் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Discussion about this post