திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் நடந்த நிகழ்ச்சியில் கனல் கண்ணன் பங்கேற்று பேசினார்.
சர்ச்சை பேச்சு அப்போது அவர் பெரியார் சிலை பற்றிய சில விஷயங்களை குறிப்பிட்டார். அதாவது, ‛‛ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரேயுள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும். அன்றைய தினம் தான் இந்துக்களின் எழுச்சி தினமாக இருக்கும்” என பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சர்ச்சையை கிளப்பியது.
வழக்குப்பதிவு :
கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி:
இந்நிலையில் தான் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கனல் கண்ணன் தொடர்ச்சியாக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post